பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய கிரீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று முதல் பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கும் அது திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை இலங்கை நடத்தும் வரை இந்த தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதே கிரீன் கட்சியின் கோரிக்கையாகும்.
மனித உரிமை நிறுவனங்கள், மற்றும் அறங்கூறுநர் ஆகியோர், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியங்களை திரட்டி இந்த இடைக்கால தடையை கோருவது என்று நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கனேடிய பிரதமரும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் கூட்டத்தை போர்க்குற்றச்சாட்டு விசாரணையின்மையை காரணம் காட்டி பகிஸ்கரிக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் அடுத்த மாதம் பொதுநலவாய தலைவர்களின் கூட்டம், அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.
கிரீன் செனட்டர், (Lee Rhiannon) லீ ரிஹானொன், தமது எதிர்ப்பு தொடர்பில் கருத்துரைக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு சர்வதேச அழுத்தம் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு அவுஸ்திரேலியாவின் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் தாம் மேற்கொள்ளும் பிரசாரங்களின் போது அவுஸ்திரேலிய பொதுமக்களின் கருத்துக் கணிப்பிலும், சாசன பரீட்சையிலும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டால், பேர்த்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு இலங்கை பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்படுவதை தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன் கட்சியினர் ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி செனட்டில் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
கனடாவும் பொதுநலவாய நாடுகளில் இலங்கையை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதாக லீ ரிஹானொன், குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச ஜூரிமார் சம்மேளனத்தின் அவுஸ்திரேலிய உறுப்பினர் ஜோன் டௌவ்ட், இது தொடர்பில் குறிப்பிடுகையில், போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக கூறப்பட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது இலங்கை.
இந்தநிலையில் அது உரிய விசாரணைகளை நடத்தாவிட்டால், அதற்கு மறுப்பு தெரிவித்தால், பொதுநலவாய நாடுகளின் அமையம் எவ்வாறு குற்றவாளி நாடு ஒன்றை தமது அங்கத்தவராக கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரும் தமிழிழீ விடுதலைப்புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு குற்றம் சுமத்தி விசாரணைகளுக்கான பரிந்துரைகளையும் செய்துள்ளமையை கிரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டமையை அடுத்து பாகிஸ்தான், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து தடை செய்யப்பட்டது.
பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னரே அந்த நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், பிஜியும், 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக