பக்கங்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2011

20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: “மராத்திய’ ஆசிரியரின் சாதனை பயணம்

மராத்தியை தாய்மொழியாக கொண்ட ஆசிரியர் இந்திராபாய், கடந்த 20 ஆண்டுகளாக தன் மாணவர்களை தமிழ்ப் பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். கோடம்பாக்கம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராக இருப்பவர் இந்திராபாய், 52, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தன் மாணவர்களை, 20 ஆண்டுகளாக, 100க்கு 100 சதவீதம் பெற வைத்து, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
தஞ்சாவூரை சொந்த ஊராக கொண்ட இந்திராபாயின் மூதாதையர்கள், சரபோஜி மன்னர் படை எடுத்து, தமிழகத்தை வென்ற போது இங்கு குடியேறினர். பின் அவருடைய ஆட்சிக் காலத்தில், மும்பையிலிருந்து வந்த பலர், தமிழகத்தில் நிரந்தரமாக தங்கினர். அவர்களில் இந்திராபாயின் குடும்பமும் அடக்கம். அப்பாவின் தமிழ் ஆர்வத்தால், பள்ளி நாட்களில் பேச்சு, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். பள்ளிப் படிப்பு முழுவதையும் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர், பின், எப்படியாவது தமிழ் படிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு, முதுகலை தமிழ் பாடத்தில், தங்கம் வென்றிருக்கிறார். “”எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்த உடன், என்னை போல் தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் என் முதல் கடமை என்று மனதிற்குள் சத்தியம் எடுத்துக் கொண்ட பிறகு தான், நான் வகுப்பறைக்குள்ளே சென்றேன்.
இப்போதும் தினமும் வகுப்பறைக்குள் செல்லும் போது, அந்த சத்தியத்தை மனதில் வைத்துக் கொண்டே நுழைவேன். இதில் இந்த நிமிடம் வரை நான் பின்வாங்கியதில்லை. என்னுடைய மாணவர்கள் இலக்கியம், சினிமா, அரசியல் என, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நான் சிந்திய வியர்வை வீண் போகவில்லை என்ற திருப்தி கிடைக்கிறது” என்கிறார் தமிழாசிரியர் இந்திராபாய். இன்றைய காலக் கட்டத்தில் தமிழ் பாடம் எடுப்பவர்களை கண்டால் மாணவர்கள் பயந்தோடுகின்றனர். ஆனால் இந்திராபாய், இலக்கணத்தை கூட எளிய வகையில் புரியும்படி நடத்துகிறார். “”என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வை விட, பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் கணவர் இறந்த ஒரு வாரத்தில் வகுப்புக்கு சென்றேன். எனக்குப் பின், என் பணியை, மாணவர்கள் யாரேனும் ஈடுபாட்டுடன் செய்தால் போதும். அதுவே மாணவர்களிடம் இருந்து பிரதிபலனாக எதிர்பார்க்கிறேன்” என்கிற இந்திராபாய், தன் தமிழ்ப் பணிக்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக