பக்கங்கள்

திங்கள், 19 செப்டம்பர், 2011

நோர்வே உள்ளூராட்சித் தேர்தல்களில் 11 இலங்கைத் தமிழர்கள் தெரிவு!


நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர்.
ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வெவ்வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார்.
ஒஸ்லோ தொகுதியின் குறூறூட் உள்ளூராட்சி அவைக்குப் போட்டியிட்ட, சோசலிச இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த புலேந்திரன் கனகரட்ணம், அதே தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிஸ்கந்தராஜா தர்மலிங்கம் - ஸ்தொவ்னர் உள்ளூராட்சி அவைக்கு தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, ரம்யா ஆறுமுகம் ஆகியோர் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர்.
ஒஸ்லோவிற்கு அண்மையில் அமைந்துள்ய லோறன்ஸ்கூ நகரசபை வேட்பாளராக தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட திலகவதி சண்முகநாதன் தெரிவாகியுள்ளார்.
றோகலாண்ட் மாவட்ட அவைத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஜேசுதாசன் அலோசியஸ், பேர்கன் நகரசபை வேட்பாளர்களாக வலதுசாரிக்கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தூர்வாசன் சிங்காரவேல், சோசலிச இடதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட குபேரன் துரைராஜா மற்றும் ஓலசுண்ட் நகரசபைக்கு வலதுசாரிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீபன் புஸ்பராஜா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் ஹம்சாயினி குணரட்ணம், புலேந்திரன் கனகரட்ணம், சுமதி விஜயராஜ், ஆதித்தன் குமாரசாமி, திலகவதி சண்முகநாதன் ஆகியோர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உள்ளூராட்சி அவை உறுப்பினர்களாக முதன்முறை தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்முறைத் தேர்தலில் இரண்டாவது தடவையாக இந்த ஐவரும் மீள்தெரிவாகியுள்ளனர்.
முதன்முறையாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பெருமளவில் விருப்புவாக்குகள் அளித்தமை முக்கிய காரணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நோர்வே நாட்டில் 2 தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கொரு முறை நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடாத்தப்படுகின்றன.
இறுதியாக செப்ரெம்பர் மாதம் 2009ம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2005 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக்கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகியன இணைந்த இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்வே நாடாளுமன்றம் 169 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2007ம் ஆண்டு நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. நோர்வேயில் 434 மாநகர சபைகளும் அவற்றின் கீழ் உள்ளூராட்சி சபைகளும் உள்ளன.
இன்னொரு வகையில் சொல்வதென்றால் 2 ஆண்டுகளுக்கொரு முறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக