ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது அமர்வில் கனடிய தமிழர் பேரவை சார்பில் சட்டத்தரணி கேரி ஆனந்தசங்கரி நேற்று உரையாற்றினார்.
தமிழர் உரிமைகள் சார்பான இலங்கை அரசின் போக்கை கடுமையாக கண்டித்த மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் ஆரம்ப உரைக்கு நன்றி தெரிவித்து மேற்கோள் காட்டிய திரு. ஆனந்தசங்கரி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச அரசியல் வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணைகள் இலங்கை அரசு போர்க்குற்றங்களை புரிந்ததற்கான வலிமையான ஆதாரங்கள் இருப்பதையே தெரிவிக்கின்றன என்றார். எனினும் இலங்கை அரசு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் சமரச கமிஷன் என்ற போர்வையில் கண்துடைப்பு விசாரணைகளையே நடத்திவருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையும் இதனையே தெரிவிக்கின்றது. அனேக நாடுகளின் அரசாங்கங்களும் இலங்கை அரசு பாகுபாடற்ற விசாரணைகள் நடத்தவேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் இத்தருணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணையம் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என திரு. ஆனந்தசங்கரி வலியுறுத்தினார். ஐ.நா. சபையின் 192 அங்கத்துவ நாடுகள் பங்குபற்றி வரும் மனித உரிமைகளுக்கான இவ் அமர்வில் உரையாற்ற கனடிய தமிழர் பேரவைக்கு சந்தர்ப்பம் அமைந்தது உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கு பெருமையும் பயனும் சாரும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக